Friday, August 10, 2018

LIFE LIGHT & SOUND जीवन प्रकाश और ध्वनि ஜீவ ஒளியும் ஒலியும்
-------------------------------
ஓம் (ௐ) பிரணவம் :
-------------------------------
அ + உ + ம் என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையே ஓம் ஆகும். ஏகாட்சரமான ஓம் என்பதை பிரித்தால் வரும் எழுத்தை
 ‘அ’கரம்,
‘உ’கரம்,
‘ம’கரம்
என்றும்
அதுவே ஓங்கார அடிப்படை ஒலிகள் எனக் கூறப்படும். \
ஓம் என்பது ஆத்மாவுக்குரிய ஓசை. பிரமத்தையே தனக்குப் பொருளாகக் கொண்ட ஓசை. ஓம் என்ற மகா மந்திர ஓசை உயிர்களை பரமாத்ம சொரூபத்தில் லயிக்கச் செய்யும் சமர்த்தியம் கொண்டது. அதுவே பிரணவ மந்திரம் ஆகும். பிரணவம் பழுத்த இடம் ஒளி பிறக்கும் படியான இடம். அதாவது அகரம் பிறக்குமிடம். ஒளி பிறக்குமிடத்தில் மந்திரங்கள் பிறக்கும். எனவே பிரணவ மந்திரம் ஆகிய ஒம் தன் ஒலியால் அசைவுகளை உண்டாக்கி அதன் ஒளியால் சக்தியை உண்டாக்குகின்றது. இந்த சக்தியே ஜீவராசிகளின் பிண்டத்திலும் (உடலில்), அண்டத்திலும் (பிரபஞ்சம்) பரவியுள்ளது.

அ என்றால் சூரியன், உ என்றால் இந்திரன், ம் என்றால் அக்னி.

எனவே ஓம் என்பது எல்லாப் பிரகாசங்களும் உள்ள பொருட்களின் சுய வடிவு. ஓம் என்ற காந்த ஒலி அதிர்வு மின் அலைகளுடன் தொடர்புடையது. ஒரு தொடர் சுழற்சியிலிருந்து ஓம் என்ற ஒலியை கேட்கலாம். பூமி மற்றும் அண்டங்களின் சுழற்சியால் பிரபஞ்சத்தில் காந்த அலைகள் ஏற்படுத்தப்படுகின்றன. சூரிய, சந்திர, நட்சத்திரங்களின் ஒளியின் அசைவுகளால் மின் அலைகள் பரவுகின்றன. இந்த அலைகள் நம் உடலிலும் பிரபஞ்ச பொருள்களிலும் பதிந்து மின் காந்த சக்தியைத் தோற்றுவிக்கின்றன. உயிர்களுக்குத் தேவையான ஆதாரப் பொருள்களும் அடிப்படைச் செயல்களுக்குரிய திரவங்களும் தாதுக்களும் இந்த சக்திகளால் உண்டாக்கப்பட்டு பிரபஞ்சத்தில் இயக்கங்கள் நடைபெறுகின்றது.

ஓங்காரத்தின் ஒளி முதலிய நிறம், சக்தியாவும் நம் மவுன முயற்சியால் மிகப் பெரிய பலன்கள் அந்த உயிரின் உடலுக்கு கிடைக்கச் செய்கின்றது.

நாபியில் ‘அ’ எனத்தொடங்கி ‘உ’ ஆக வளர்ந்து ‘ம்’ என முடியும் ஓம் என்ற அந்த ஓசையுடன் காலம், இடம், காரணம், காரியம் எல்லாம் நம் மனத்தில் தாக்கங்களை ஏற்படுத்தும்.

காலத்தை- விநாடி, நிமிஷம்,மணி, நாள், மாதம், அண்டு ஆகிய அருவ அளவைகளால் உணரலாம்.

இடத்தை- தொடங்கும் இடத்தின் எல்லை, முடியும் இடத்தின் எல்லைக்குட்பட்ட நீட்டல் அளவை முதலிய உருவ அளவைகளால் உணரலாம்.

காரணம், காரியம்- ஓர் சிறிய ஆலம் விதையில் பெரிய ஆலமரம் உண்டாகிறது என்ற காரண காரியத்தை புரியலாம்.

ஓம் என்ற அருவமான ஓர் ஓசை சக்தியின் வளர்ச்சியை இயக்கத்தை காலம், இடம், காரண காரியம் ஆகிய அடையாளங்களால் உடம்பினுள்ளும் பிரபஞ்சத்திற்குள்ளும் உருவாக்க முடியும்.

பிரபஞ்சத்தின்(அண்டம்) சிறிய பகுதி உடல்(பிண்டம்). பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் உடலில் இருப்பதால் பிரபஞ்ச ஓங்கார ஓசையை உடலினுள் சொல்வதால் பிரபஞ்ச பயனை அடையலாம்.

நாதம் என்பது பிரபஞ்சம் முழுவதும் உள்ள ஆகாயத்தின் அடிப்படை ஒலித் தத்துவமாகும். பிரபஞ்சத்தின் எல்லா நாத ஓசைகளும் தன்னிலிருந்து சில பொருட்களை உண்டாக்கும்.

குரலின் இனிய ஓசை, காற்றின் ஓசை, நெருப்பின் எரியும் ஓசை, மண்ணின் சரியும் ஓசை, நீரின் பாயும் ஓசை மற்றும் ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கு ஓசை எடுத்துச் செல்வது போன்றவைகள் எல்லாம் நாதத்தின் வகைகளாகும்.

செயற்கை கருவிகளால் உண்டாகும் செயற்கை ஓசைகள் ஏற்றத்தாழ்வு கொண்டிருந்தாலும் நாத அளவில் அது இயற்கையானது.

இந்த இயற்கையான நாதங்களை ஒருங்கினைத்து தோன்றுவிப்பதே ‘ஓம்’ எனும் பிரணவ ஒலி மந்திரமாகும். இந்த நாதத்தை நாபியின்(தொப்புள்) பகுதியில் எழுப்பும்போது உடலில் உள்ள வேதியல் பொருள்களில் பலவித வடிவம், நிறம், ஒளி, சக்தி, அலை ஆகியன உண்டாகும்.

உடம்பின் உள்ளே தோன்றும் தச வாயுக்களாலும் உடலில் உள்ள அக்னியின் மேல் செல்லும் போக்காலும் இந்த பிரணவ ‘ஓம்’ உடம்பின் கீழிருந்து மேல் நோக்கி உச்சித் தலைக்கும் அதற்கு மேலும் தடையின்றி போகும்.

அப்படிப் போகும்போது பெயர், எல்லை, ஒளி, நிறம், தெய்வம், அளவு, வடிவம், சூனியம் ஆகிய பகுதிகளை வரையறை செய்து உணர்ந்தால் ஓங்காரம் பிரபஞ்சத்துடன் ஒன்றி உடலில் பரவுவதை அனுபவிக்கலாம். இப்போது இந்த ஞான ஒளி உள் ஒளியாகி குண்டலி சக்தியாக வெளிப்படும். எனவே ஓம், பிரணவம், குண்டலி யாவும் ஒன்றை ஒன்று சார்ந்தது என்பது புரியும்.

பிரபஞ்சத்தில் உருவாக்கப்படும் எல்லாப் பொருள்களுக்கும் உரிய தேவர்கள் உண்டு. ஓம் எனும் பிரணவத்தில் ‘அ’ என்பது முதலில் தோன்றுவதால் ‘அ’காரமாவது உலக உற்பத்தியை குறிக்கும், அதற்குரிய தேவர் படைப்புக் கடவுள் என்றும், ‘உ’ என்பது வளர்வதற்குத் துணை செய்வதால் ‘உ’காரம் வியாபித்தல் என்பதைக் குறிக்கும், அதற்குரிய தேவர் காவல் கடவுள் என்றும், ‘ம்’ என்பது முடித்து வைப்பதால் ‘ம’காரமாவது அழித்தலைக் குறிக்கும், அதற்குரிய தேவர் சம்ஹாரக் கடவுள் என்றும் உணர்த்தப்படும்.

எனவே ‘ஓம்’ என்பது படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் தம்மகத்தே கொண்டதால் முத்தொழிலுக்குரிய கடவுள்களும் அதில் அடங்குவர்.

‘அ’காரம், ‘உ’காரம், ‘ம’காரம் ஆகிய மூன்றையும் மூன்று உடல்களாக கருதப்படும். அவை முறையே ஸ்தூலம் (பருஉடல்) கண்ணுக்குப் புலனாகும் மாமிச உடல், மண்ணியல்பாய் உருவானது என்றும், சூட்சமம் (நுண்ணுடல்) கண்ணுக்குப் புலப்படாமல் அமைந்திருப்பது (ஞானேந்திரியங்கள்-5, கர்மேந்திரியங்கள்-5, அந்தகாரணங்கள்-4, பிராணவாயு-1 இதை லிங்க சரீரம் எனக் கூறப்படும்) என்றும், காரணம் (லிங்க உடல்) பரு உடல் நுண்ணுடல் இரண்டிற்கும் காரண வித்தாக இருக்கும் இதை சஞ்சீத கன்மம், தொகைவினை எனக்கூறப்படும்.

‘அ’காரம், ‘உ’காரம், ‘ம’காரம் மூன்றும்
மூன்று உடல்களாக மட்டுமல்லாமல்
பெண், ஆண், அலி என மூன்றுமாகவும்,
ருக்வேதம், யஜுர்வேதம், சாமவேதம்
என மூன்று வேதங்களாகவும்,
கார்ஹபத்யாக்னி, தக்ஷிணாக்னி, ஆஹவனீயாக்னி
என மூன்று அக்னியாகவும்,
ஹ்ரஸ்வம், தீர்க்கம், ப்லுதம்
என்ற மூன்று ஸ்வரங்களாகவும்,
பாதம், நாபி, சிரசு என மூன்று
சர்வ அவயவங்களாகவும்,
புத்தி, மனம், அஹங்காரம் என மூன்று
சர்வ அந்தக்கரண ஸமஷ்டியாகவும்,
ரஜோகுணம், ஸத்வகுணம், தமோகுணம்
என மூன்று குணபேதங்களாகவும்,
சிவப்பு, கபிலம், கறுப்பு என
மூன்று வர்ணங்களாகவும்,
பூரகம், கும்பகம், ரேசகம் என மூன்று
ப்ராணாயாம அப்பியாசமாகவும்,
நாதம், பிந்து, களை என மூன்றுமாகவும்,
கிரியாசக்தி,பிந்து, ஞானசக்தி என மூன்றுமாகவும்,
ப்ராஹ்மணீ, வைஷ்ணவீ, ரௌத்ரி என மூன்றுமாகவும்,
பிரும்மா, விஷ்ணு, ருத்திரன் என திரிமூர்த்திகளாகவும்,
சென்றகாலம், நிகழ்காலம், எதிர்காலம்
என மூன்று காலங்களாகவும்,
ஜீவாத்மா, அந்தராத்மா, கூடஸ்தன் என மூன்றுமாகவும்,
விராட் புருஷன், ஹிரண்யகர்ப்பன், ஈஸ்வரன்
என மூன்றுமாக இருந்தும் செயல்புரிய வல்லது.

எனவே ‘ஓம்’ என்ற பிரணவத்தில் எல்லாம் அடங்கும்.

உலக உற்பத்திக்கு காரணம் பரம்பொருளே. ‘அ’ கார உயிர் எழுத்து அனைத்துமாகி வேறாய் அமர்ந்து, ஓங்காரத்தால் ஐந்தெழுத்தால் புவனத்தை உண்டு பண்ணும் பரம்பொருள் என்றார் தாயுமானவர்.

நாதவடிவமான பிராணவம் மூன்றாகப் பிரிந்து அதிலிருந்து ஐந்து எழுத்தான பஞ்சாட்சாரம் பிறந்தது. அந்த 5 லிருந்து 51 அக்ஷரங்கள் தோன்றின.

எழுத்துக்கள் ஒற்றும் உயிரும் என இருவகைப்படும்.

உயிருடைய பொருள், உயிரில்லாப் பொருள் என உலகத்தில் இருவகைப்படும்.

‘அ’ காரம் எல்லா எழுத்துக்களிலும் கலந்து அவைகளை இயக்கும் தன்மை கொண்டது. தானும் தனித்து இயங்கவல்லது. இறைவன் தானும் இயங்கி எல்லாப் பொருளிலும் கலந்து அவைகளை இயக்குவதுபோல் ‘அ’ காரம் இயங்காமல் எந்த எழுத்தும் இயங்காது.

வாயை திறந்தவுடன் உண்டாவது ‘அ’ கார ஒலியே! ஒலி வேறுபாட்டில் உதிக்காமல் வாய்திறந்து எழும் ஒலிமாத்திரமான இயற்கையாகப் பிறப்பது ‘அ’ காரம். ‘அ’ காரம் எல்லா பொருள்களிலும் கலந்து இருப்பதுபோல் கடவுள் எல்லாப் பொருள்களிலும் கலந்து இருக்கின்றார். இதுவே “மெய்யின் இயக்கம். ‘அ’கரமொடு சிவனும்” என்று தொல்காப்பியத்தில் குறிபிடப்பட்டுள்ளதாகும்.

மேலும் ‘அ’ காரத்தில் தொடங்கும் சொற்கள் (அரன், அரி, அயன், அரசன், அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், அண்ணி, அத்தை, அண்டம், அன்பு, அறிவு, அறம், அடக்கம், அமைதி, அகம், அழகு, அறிஞர், அண்ணல் எல்லாம் மிகமிக உயர்ந்தவற்றை குறிப்பிடுபவையாக அமந்துள்ளது அறிக.

அருணகிரிநாதர், தொல்காப்பியர், திருவள்ளுவர், ஒளவையார், குமரகுருபரர், உய்யவந்த நாயனார் ஆகிய அருளாளர்கள் ‘அ’காரத்திற்கு முதலிடம் தந்து இறைவனுக்கு நிகராக்கி சிகரமாக சிறப்பித்துள்ளதே ‘அ’காரத்தின் சிறப்பை வழிவழியாக நம் முன்னோர்கள் அறிந்துள்ளது அறியலாம்.

No comments:

Post a Comment