Friday, August 10, 2018

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும்
தானமும் தவமும் பெறுதல் அரிது
தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே.-ஔவை
தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள்.

இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்பது அல்லது கேட்பது. மந்திரங்கள் ஓதுவது. பக்தர்களுடன் கூடி பஜனைகள் பாடுவது. அன்றாடம் பூஜை புனஸ்காரங்கள் செய்வது.நாம ஜெபம் செய்வது. உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்வது. மொத்தத்தில் பக்தி, ஒழுக்கம், நன்னடத்தை, நற்குணம், நற்பண்பு, நல்லெண்ணம், சத்சங்கம், இவையெல்லாம் சரியையாகும். இதுவே இச்சா சக்தி. இதில் இறைவனே தாயும், தந்தையுமாவார். சாதகன் புத்திரனாவார்.
கிரியை - கடவுளுக்கு மாலைகள் தொடுப்பதில் தொடங்கி கும்பாபிஷேகம் செய்வதுவரை கிரியை நெறி எனக் கொள்ளலாம். அலய உழவாரப் பணிகள், அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள், அடியார்களுக்குத் தொண்டு செய்வது, எல்லா உயிர்களையும் சமமாகபாவித்து அவர்களுக்கு உதவி செய்வது, அன்னதானங்கள் செய்வது, யாகங்கள் செய்வது, தர்மம், நீதிநெறி தவறாமல் நடப்பது, பணிவு, தியாகம் இவை யாவும் கிரியைகளாகும். இதுவே கிரியா சக்தி. இதில் இறைவன் ஆண்டான் சாதகன் அடிமை.

யோகம் - தன்னை உணர்ந்து தன்னுள் உறையும் தலைவனையும் உணர்ந்து ஒலியால் கனலையும் அனலையும் கூட்டி ஒளியேற்றுவதே யோகம். குருவைத் தேடுவது, உடல் இயக்கம் உயிர் இயக்கம் பற்றி உணர்தல், தத்துவங்களை புரிந்து கொள்தல், உண்மையாக இருத்தல், தனித்து பசித்து விழித்திருத்தல், காற்றைப் பிடித்தல், ஆன்மாவை இறையோடு சேர்த்தல் இவையெல்லாம் யோகமே. ஆசனங்கள், வாசி யோகம், ராஜயோகம், குண்டலினி யோகம், பரியங்க யோகம், ஹடயோகம், அஷ்டாங்க யோகம், எனறு யோகத்தில் பல வகைகள் இருக்கின்றன. யோகத்திற்கு விடாமுயற்சி, வைராக்யம், கடுமையான பயிற்சி அவசியம். இதனால் மனம் வசப்படும். திறமையும் ஆற்றலும் பெருகும். பிணிகளும், வினைகளும் அகலும். இதுவே யோக சக்தியாகும். இதில் இறைவனும் சாதகனும் நண்பர்கள்.
ஞானம் - தன்னிலை அறிந்து, தன்னை மறந்து, சும்மா இருந்து, மெய்யறிவு பெறுவதே ஞானம் தியானம், மெய்ப்பொருள், மௌனம், அமைதி, ஆனந்தம், அற்புதங்கள் யாவும் ஞானக் கலைகளே. தான் என்ற தற்பரத்தை உணர்ந்து எல்லாம் ஒன்றென்றுணர்ந்து தவநிலை நாட்டுவது, பற்றறுத்து துறவு பூணுவது, மனதை வசப்படுத்தி அதிலேயே அடங்குவது, சாந்தம், தயவு, கருணை, பேரருள், நிதானம் யாவும் ஞானமே. இதுவே ஞான சக்தி. இதில் இறைவன் சற்குரு சாதகன் சீடன்.

பொதுவாக சரியை என்பது பக்தி. கிரியை என்பது தொண்டு. யோகம் என்பது வாசி. ஞானம் என்பது தியானம். இதனையே சித்தர்கள் சரியையில் பக்தி, சரியையில் தொண்டு, சரியையில் யோகம், சரியையில் ஞானம், கிரியையில் பக்தி, கிரியையில் தொண்டு, கிரியையில் யோகம், கிரியையில் ஞானம், யோகத்தில் பக்தி, யோகத்தில் தொண்டு, யோகத்தில் யோகம், யோகத்தில் ஞானம், ஞானத்தில் பக்தி, ஞானத்தில் தொண்டு, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம், மும்மலங்கள் நீங்கப் பெறுவது, சரணாகதி என்று பதிணெட்டு நிலைகளாக உணர்ந்து பயின்று இறை அனுபூதி பெற்று அஷ்டமா சித்திகளும் அடைந்தார்கள்.
தன்னை உணர்ந்தவர்கள்தான் பரம்பொருளை உணரமுடியும். இதையே திருமூலர்...
தன்னை அறிய தனக்கோர் கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்த பின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந்தானே. என்கிறார். ஆக தன்னை உணர்தலே ஞானம்.
Shiva Raja yogi Dr.Suresh
Cell :+91 9884380229

1 comment:

  1. அருமையான விளக்கம் சகோதரரே... வாழ்த்துக்கள் 🙏

    ReplyDelete