Monday, March 11, 2019

21600, Breathings per day

www.supremeholisticinstitute.com

கேள்வி - மூச்சை உடலில் உள்ள சக்கரங்களில் நிலை நிறுத்தி தியானம் செய்வது எப்படி ?

பதில் - மனம் எங்கு செல்கிறதோ அங்கு பிராணனின் திணிவு ஏற்படும். உடலில் மனதைக் கொண்டு போய் எந்த இடத்தில் நிலை நிறுத்துகிறோமோ அந்த இடத்திற்கு பிராணன் செல்லும். நாம் சுவாசத்தின் மூலம் இடைவிடாது பிராணனைப் பெற்றுக் கொள்வதால், அந்த இடத்திற்கு சுவாசத்தின் தொடர்பு ஏற்படும். சிலர் வெளியில் கூட தங்கள் பிராண சக்தியை செலுத்தி பல அற்புதங்களை நிகழ்த்துவதுண்டு. அதற்கு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அது போலவே நாம் விரும்பிய ஆதாரச் சக்கரங்களில் மூச்சை செயல்படுத்துவதற்கும் பயிற்சி மேற் கொள்ள வேண்டும். முதலில் மூச்சைக் கட்டுப்படுத்திப் பழக வேண்டும், பிறகு மனதை ஒரு நிலைப்படுத்தி வெற்றி பெற வேண்டும். அதற்குப் பிறகுதான் சூக்கும நிலைகள் பற்றிய விழிப்புணவைப் பெற முடியும். அந்த நிலையில் சக்கரங்களில் மூச்சை நிறுத்தி தியானம் செய்வது சாத்தியமாகும்.

''நாளொன்றுக்கு இருபத்தோராயிரத்து அறுநூறு
நலமான சுவாசந்தான் எழுந்திருக்கும்
கோளொன்றி பதினாலாயிரத்து நானூறு
குவித்த மூலாதாரத்துள் ஒடுங்கும்,
பாளொன்றி ஏழாயிரத்தி இருநூறு சுவாசம்
பாழிநிற் பாய்ந்திடும் மென்றறிகப் பின்னை
ஏளொன்றி இதனையே உட்சுவாசித்தால்
எப்போதும் பாலனாய் இருக்கலாமே!!!'' - யூகிமுனி

நாள் முழுவதும் நாம் விடும் மூச்சில் மூன்றில் ஒரு பகுதி உடலின் மூலாதாரத்தை அடையாமல் வீணடிக்கப்படுகிறது. அந்த வீணடிக்கப்படும் மூன்றில் ஒரு பகுதியையும் வீணாக்காமல் சுவாசிப்பதற்கே சுவாசக்க கலை எனப்படும் யோகக் கலை தேவைப்படுகிறது. நம்முடைய சுவாசம் இட கலையிலிருந்து , பிங்கலைக்கும், பிங்கலையிலிருந்து, இடை கலைக்கும் இயல்பாக மாறி மாறி நடந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு மாறி மாறி சுவாசம் நடந்து கொண்டிருப்பதற்கிடையே ஒரு இடைவெளி ஏற்படுகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில்தான் சுழுமுனை நாடி வேலை செய்கிறது. சுழுமுனை நாடி வேலை செய்யும் அந்த இடைவெளிதான் சிதம்பர ரசசியம் எனப்படுகிறது. குறிப்பிட்ட இந்தச் சொற்ப நேரத்தில் எண்ணங்கள் இல்லாமல் மனம் இயல்பாகவே சூன்ய நிலையை, வெட்ட வெளி நிலையை அடைகிறது. இந்த வெற்றிடத்தைத் தரிசிப்பவர்களுக்கு, அந்த நிலையிலேயே நீடித்திருக்க முடிந்தவர்களுக்கு மரணத்தை வெல்லும் சித்தி வாய்க்கிறது. ஒரு நாளைக்கு நடக்கக் கூடிய 21,600 சுவாசத்தில் 3000 சுவாசங்கள் இந்த சுழுமுனையில் நடக்கிறது.

ஒவ்வொரு ஆதாரங்களிலும் தினமும் நடக்கும் சுவாசம்.
மூலாதாரம் காலை - 06.00 மணி முதல் 06.30 வரை 600 சுவாசம்.
சுவாதிட்டானம் காலை - 06.30 மணி முதல் மதியம். 1.30 வரை 6000 சுவாசம்.
மணிபூரகம் மதியம் - 1.30 மணி முதல் இரவு 8 மணி வரை 6000 சுவாசம்.
அனாகதம் இரவு - 8.00 மணி முதல் அதிகாலை 2.30 வரை 6000 சுவாசம்.
விசுக்தி அதிகாலை - 2.30 மணி முதல் 3.45 வரை 1000 சுவாசம்.
ஆக்ஞை அதிகாலை - 3.45 மணி முதல் 04.50 வரை 1000 சுவாசம்.
சகஸ்ராரம் அதிகாலை - 4.50 மணி முதல் காலை 06.00 வரை 1000 சுவாசம்.

ஆக மொத்தம் 21.600 சுவாசங்கள் முறையே நம் ஆதாரங்களில் தினமும் காலந்தவறாமல் நடைபெறுகின்றன. அந்தந்த ஆதாரங்களில் சுவாசம் நடைபெறும் பொழுது, மனதை அந்தந்த ஆதார மையங்களில் வைத்து, அவற்றிற்குரிய பீஜ மந்திரங்களை உச்சரித்து தியானித்து வர வர சக்கரங்களின் இயக்கம் உணர்விற்கு வரும். பிறகு நாம் விரும்பிய மையங்களில் மனதைச் செலுத்தி, சுவாசத்தை இயக்கும் ஆற்றலைப் பெறலாம்.